Thursday, November 28, 2019

மீட்பர் - சத்யா

மீட்பர் - சத்யா

இதோ நமது மீட்பர் என்றனர்

நம் போன்ற
செம்மறி ஆட்டுக்குட்டிகளை
தொட்டுத் தூக்கி தோளில் சுமப்பவர் அவர் என்றனர்

செம்மறி ஆடுகளுக்காய்
கசாப்புக்கடைக்காரனின் கழுத்தைப் பதம்பார்த்த
பட்டாக்கத்தியை தன் இடுப்பில் சொருகி வைத்திருப்பவர் அவர் என்றனர்

நமக்கான
புல்லுக்கட்டுகளைச் சுமக்கும்
சும்மாடினை
தலையில் அணிந்தவர் என்றனர்

நமக்காக
மலைகளிலும் பள்ளங்களிலும்
நதிகளிலும் காடுகளிலும்
அலைந்து தேய்ந்த செருப்பினை அணிந்த
நல்ல மேய்ப்பர் அவர் என்றனர்

அன்பும் பேரெழிலும் கொண்ட
சலனமற்ற கண்களால்
நம்மை மோட்சிக்க வந்த மீட்பர் என்றனர்

காரிருளில்
கைபிடித்து வழிகாட்டும்
வெளிச்சம் அவர் என்றனர்

தடுமாறி தரையில் விழும் நம்மை
தாங்கிப்பிடிக்கும்
தயாளர் என்றனர்

மலையுச்சியில் உறங்காத சன்னல்களுடைய
அவர் வீட்டின் வாசலில் நின்று
உரக்க சத்தமெழுப்பிக் கேட்டேன்
'நீரா எம் மீட்பர்'

படாரென கதவைத்திறந்து
அருள்பொங்கும் கண்களால்
என்னைப் பார்த்து புன்னகைத்தபடி
செம்மறியாடுகளின் ரோமத்தாலான
மேலாடையை இழுத்துவிட்டுக்கொண்டு சொன்னார்
'ஆம், யாமே உமக்கான மீட்பர்'

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் சுப்புராயுலு நினைவு விருதுகளுக்காக
13. முத்துராசா குமார் அவர்களின்பிடிமண்
கவிதைத் தொகுப்பும் இணைந்துள்ளது.

Tuesday, November 26, 2019

நீதி - சத்யா

நீதி - சத்யா


உலகின் ஆகச்சிறந்த நியாயவான்களின் நீதி வழங்கப்பட்டது

இதுதான் தீர்ப்பென்று
எழுதி முடித்து
முகத்தில் எறிந்தவர்களிடம்
'இது நீதியா' எனக் கேட்டபோது அனாயாசமான உறுமலை வெளிப்படுத்தினர்

இதோ தீர்ப்பென்று
படித்து முடித்து
கிழித்து வீசியவர்களிடம்
'இது திருப்தியா' எனக்கேட்டபோது அருவமான முனகலை வெளிப்படுத்தினர்.

இது நீதியென்று
களித்து கொண்டாடி
மகிழ்ந்தவர்களிடம்
'யாருக்கான நீதி' என்றபோது
கடைவாயில் வழியும் ரத்தமுடைய பற்கள் தெரிய சிரித்து, 'நமக்கானது' என்றனர்.

கையில் திணிக்கப்பட்ட
நீதியின் கனம் தாங்காமல்
வருத்தப்பட்டு பாரஞ்சுமந்தவர்களிடம்
'இது யாருக்கான நீதி' என்றபோது
பற்களின் தடம் பதிந்த கழுத்தில் வழியும் ரத்தத்தை மேலாடையால் மூடிக்கொண்டு பதட்டமாக, 'நமக்கானது' என்றனர்.

நியாயவான்களிடம்
'ஐயா நீதி எதற்காக வழங்கப்படுகிறது'
என்று கேட்டபோது
திருப்திப்படுத்த என்றனர்

சிலநேரங்களில் பெரும்பான்மையினரை திருப்திப்படுத்த
சிலநேரங்களில் அதிகாரம் படைத்தோரை திருப்திப்படுத்த
சிலநேரங்களில் பெரும்பான்மை அதிகாரம் படைத்தோரை திருப்திப்படுத்த
சிலநேரங்களில் அதிகாரம் படைத்த பெரும்பான்மையினரை திருப்திப்படுத்த

சிலநேரம் தக்கவைக்க
சிலநேரம் நெட்டித்தள்ள
சிலநேரம் அவசரப்படுத்த
சிலநேரம் தாமதப்படுத்த

அடிக்கவும்
தடுக்கவும்
இடிக்கவும்
கட்டவும்

நீதி வழங்கப்படுகிறது என்றனர் அந்த மகா நியாயவான்கள்
புன்னகை மாறாத முகத்தோடு

'ஐயா,
அப்போது நீதி
நியாயத்துக்காய் வழங்கப்படுவதில்லையா?'
என்றவுடன்

மூக்கு நுனியில்
ஒட்டிய கண்ணாடியின் மேல்
கண்களை உருட்டி
உதடுகளும்
கன்னத்து கழுத்து சதைகளும் குலுங்க
கிரீடமாய் சூட்டப்பட்ட
கழுத்தின் இருபுறமும்
சுருளும் வெள்ளை முடிகளை அள்ளி
குடுமியாய் முடிந்துகொண்டு
ஒத்த குரலில்

'உனக்கான நீதி வழங்கப்பட்டது
உனக்கு வழங்கப்பட்டதே உனக்கான நீதி'
என்றபடி
வெளியேறுவதற்கான நீதியை என் கையில் திணித்தனர்.

ஆம்,
உலகின் ஆகச்சிறந்த நியாயவான்களின் நீதி
வழங்கப்பட்டது.

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் கு.பா நினைவு விருதுகளுக்காக
17. வீ. உதயக்குமாரன்  அவர்களின்
கண்ணாடி மாளிகைசிறுகதைத் தொகுப்பு ம் இணைந்துள்ளது.

Friday, November 8, 2019

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் கு.பா நினைவு விருதுகளுக்காக
16. எம்.ஆர்.சி.திருமுருகன்  அவர்களின்
நானொரு டெர்ன் பறவைசிறுகதைத் தொகுப்பு ம் இணைந்துள்ளது.

Friday, November 1, 2019

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் சுப்புராயுலு நினைவு விருதுகளுக்காக
12. ஷக்தி அவர்களின்அபோர்ஷனில் நழுவிய காரிகை
கவிதைத் தொகுப்பும் இணைந்துள்ளது.