Wednesday, November 9, 2011

அணுசக்தியை மக்கள்சக்தி தோற்கடிக்கும் - பாலசுந்தரம், மாநிலச் செயலர், இகக (மா-லெ)


இந்தியாவின் கவனத்தை திருப்பியுள்ள இடிந்தகரை மக்கள் போராட்டத்திற்கும் சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கும் தலைவர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மத்திய, மாநிலக் கமிட்டிகள் சார்பாக எனது புரட்சி வாழ்த்துகளை போராட்ட ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் போராட்டங்களைக் கண்டு மன்மோகன் ஆட்சி அஞ்சுகிறது. ஆதிவாசிகளின் போராட்டங்களைக் கண்டு அஞ்சுகிறது. நொய்டா விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டு அஞ்சுகிறது. ஊழலுக்கெதிரான போராட்டங்களைக் கண்டு அஞ்சுகிறது. கூடங்குளம் அணு உலையை மூடவேண்டும் என்று போராடி வரும் இடிந்தகரை போராட்டத்தைப் பார்த்தும் அஞ்சுகிறது.
அதனால்தான் பிரதமர் மன்மோகன் கூடங்குளம் அணு உலையிலிருந்து மின்சாரம் கிடைப்பது தடைபடுமானால் தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி பாதிக்கப்படும் என்று மாநில அரசாங்கத்தை அச்சுறுத்துகிறார்! இடிந்த கரைப் போராட்டம் தொழில் வளர்ச்சிக்கு எதிரான போராட்டம் என்று கூறுகிறார். தொழில் வளர்ச்சிக்காக மக்கள் மடிவது பற்றி கவலைப்படக்கூடாது என்கிறார்.
இடிந்தகரை போராட்டம் இந்தியாவின் போராட்டம் என்று எமது கட்சி கூறுகிறது. இவ்வாறு சொல்வது, ஏதோ எதுகை மோனைக்காகவோ உங்களை உற்சாகப் படுத்துவதற்காகவோ சொல்லப் படுவதில்லை. உண்மை, முற்றிலும் உண்மை. நிலம், வனம், இயற்கை வளங்கள், மனித உழைப்பு அனைத்தையும் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பேரால் ஒழித்துக்கட்டுவதை எதிர்த்து இந்தியாவெங்கும் மக்கள் போராடி வருகிறார்கள். இடிந்தகரையிலும் போராடி வருகிறார்கள்.
தொழில் வளர்ச்சி பாதிக்கப் படும் என்று அச்சுறுத்தும் மன்மோகன் ஆட்சியைப் பார்த்து, தொழில் வளர்ச்சியை விட மக்கள் பாதுகாப்பே முக்கியம்; கூடங்குளத்திலிருந்து அணு உலையை அப்புறப் படுத்திட வேண்டுமென்று முதலமைச்சர் கூறியிருக்கவேண்டும். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் அப்படிக் கூறியிருக்கவேண்டும். அப்படிக் கூறியிருந்தால் நமக்கு நம்பிக்கை பிறந்திருக்கும்.
இடிந்தகரை போராட்டத்தை ஆதரிப்பதாக கூறும் கட்சிகள், தலைவர்கள் ஒரு விசயத்தை திரும்பத் திரும்பக் கூறுகிறார்கள். மக்களின் அச்சத்தைப் போக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இன்றைய முதல்வரும் இதைத்தான் கூறுகிறார். நேற்றைய முதல்வரும் இதையேதான் கூறுகிறார். வருங்கால முதல்வர் என்று சொல்லிக் கொள்வோரும் இதையே கூறுகிறார்கள். இடிந்தகரை போராட்டம், அச்சத்தால் எழுந்த போராட்டம் என்கிறார்கள். இது மிகவும் தவறான கருத்து. மோசடியான கருத்து. அச்சம் என்பது, இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணிக் கொள்வதால் ஏற்படுவது. அறியாமையால் ஏற்படுவது. அதனால்தான அவ்வையார் அச்சம் தவிர் என்றார். அச்சமில்லை, அச்சமில்லை என்றான் பாரதி.
இங்கு நடனமாடிய பள்ளி மாணவிகள், அச்சமில்லை, அச்சமில்லை என நடனமாடினார்கள். இடிந்தகரை போராட்டம் அச்சத்தால் எழுந்த போராட்டமல்ல. அறிவால் எழுந்த போராட்டம் . அனுபவத்தால் எழுந்த போராட்டம். வரலாறு தெரிந்ததால் எழுந்த போராட்டம். நெருப்பு சுடுமென்பதை தொட்டுதான் தெரிந்து கொள்ளவேண்டுமா? சுனாமி தமிழ்நாட்டின் கடற்கரையோரங்களை சின்னபின்னமாக்கியதை மறந்தா விட்டோம்? அணுசக்தி என்றாலே அழிவுகரமானது என்பதை ஹிரோஷிமா, நாகசாகி, புகுஷிமா, செர்னோபில் கூறுவதை மனித சமூகம் எப்படி மறந்துவிட முடியும்? அச்சமில்லை, அச்சமில்லை என மாணவிகள் ஆடிய நடனம், அச்சத்தால் எழுந்த போராட்டம் என்று பேசுகிறவர்கள் முகத்தில் அறைகிற நடனம்.
இடிந்தகரை போராட்டத்திற்கெதிராக, விஞ்ஞானிகள் பேசுகிறார்கள். எஸ்.கே ஜெயினையும் பானர்ஜியையும் இறக்கிவிட்டிருக்கிறார் மன்மோகன், பாவம்! மக்கள் உணர்ச்சிவசப்பட்டு போராடுகிறார்கள் என்று கூறுகிறார்கள். அறிவியல் படிப்படியாக மக்களிடம் எடுத்துச் செல்லப்படவேண்டும் என்று சொல்கிறார்கள். நமது போராட்டக் குழுவினர் மன்மோகன்சிங்கை சந்திக்கச் சென்றார்கள். அப்போது பிரதமர் எதுவும் பேசவில்லை. அவரைச் சுற்றியிருந்த விஞ்ஞானிகள் மட்டுமே பேசியிருக்கிறார்கள். கூடங்குளம் அணு உலைக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி விளக்கியிருக்கிறார்கள்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த நமது போராட்டக்குழுத் தலைவர், அதெல்லாம் சரி, அணு உலையிலிருந்து வரும் புளுட்டோனியம் கழிவை (இது அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுத்துவது) என்ன செய்வீர்கள்? எப்படி பாதுகாப்பீர்கள்? என்று கேட்டிருக்கிறார். அது ஒன்றும் பெரிய விசயமில்லை. அதை கல்பாக்கம் உலையில் மறு சுழற்சி செய்வோம். பிறகு அது ஒரு கிரிக்கெட் பந்து அளவுக்குதான் இருக்கும். அதை ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். ஏன் அதை இவர்கள் ஆளுக்கொன்றாக தங்கள் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளவேண்டியதுதானே? இவர்களெல்லாம் விஞ்ஞானிகள்! தேசத்திற்காக துரும்பைக்கூட இழக்காத விஞ்ஞானிகள்! இந்த தேசத்தையேக் கட்டி எழுப்பிய மக்களைப் பார்த்து இவர்கள் இழிவாகப் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது. கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது இது.
மக்களின் உணர்ச்சிகளைப் புரியாதவர்கள் எப்படி விஞ்ஞானிகளாக இருக்கமுடியும்? மக்களின் உணர்வுக்குப் பின்னால் உண்மை இருக்கிறது. நியாயம் இருக்கிறது என்பதைப் புரியாதவர்கள எப்படி விஞ்ஞானிகளாக இருக்கமுடியும்?
ரஷ்ய அணு உலைக்கெதிராக அமெரிக்கா போராட்டத்தை தூண்டி விடுவதாக சில அறிவாளிகள் பேசுகிறார்கள்! கூடங்குளம் அணு உலை மூடப்பட்டுவிட்டால் அமெரிக்க உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கொண்டுவர நினைக்கும் அணு உலைகளைக் கொண்டு வர முடியாது என்று வல்லரசுகள் அஞ்சுகின்றன. எனவே இடிந்தகரைப் போராட்டம் வல்லரசுகளுக்கெதிரான போராட்டம்.
மூட்டை மூட்டையாக லஞ்சம் கொடுத்து மன்மோகன் சிங் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் வெற்றி பெற்றது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் காப்பாற்றிக் கொள்ள மோசடி செய்து அரசாங்கத்தைக் காப்பாற்றிக் கொண்டது. கண்டலிசா ரைஸ் நவம்பர் 1ந்தேதி வெளியிட இருக்கும் தனது புத்தகத்தில் மன்மோகன்சிங்கையும் நட்வர்சிங்கையும் இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடவைத்ததாக கூறுகிறார். அமெரிக்கா கவலைப்படுகிறது. இந்தியாவில் அதிக அளவில் அணு உலைகளை தொடங்க திட்டமிட்டுள்ள அமெரிக்கா கவலைப்படுகிறது. இடிந்தகரை போராட்டம், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நார் நாராய் கிழித்துப் போட்டிருக்கிறது. இடிந்தகரை போராட்டம் அமெரிக்கஇந்திய அணு சக்தி ஒப்பந்தத்திற்கெதிரான போராட்டம்.
ஜி 20 மாநாட்டின் போது பிரணப் முகர்ஜியையும் மன்மோகன்சிங்கையும் பார்த்து உலகப் பெருமுதலாளிகளின் அரசாங்கங்கள் கேட்டன. ‘கூடங்குளம் அணுஉலை விசயத்தில் என்ன செய்யப் போகிறீர்கள்?‘ இடிந்தகரை போராட்டம் உலக முதலாளிகளை கவலைப் படச்செய்துள்ளது. இடிந்தகரை போராட்டம் உலகமுதலாளிகளுக்கெதிரான போராட்டம். உலகமயத்திற்கெதிரான போராட்டம்.
கூடங்குளம் அணு உலை பற்றி எப்போது பேசப்பட்டதோ அப்போதே அதற்கான எதிர்ப்பும் உருவாகி விட்டது. மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி அப்போதே எதிர்ப்பு தெரிவித்து இயக்கம் நடத்தியது. தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. இங்கு நாங்கள் உங்கள் முன்பு நின்று கொண்டிருக்கும் இன்று மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி தமிழ்நாடு முழுவதும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு நாள் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறது. இங்கு வருவதற்கு முன்பு நெல்லையிலே ஆர்ப்பாட்டத்தை நடத்திவிட்டுத்தான் புறப்பட்டோம். கோவையிலே தொழிலாளர் வர்க்கம் அணிதிரண்டு எதிர்ப்பு தெரிவிக்கின்றது. அந்த கூட்டத்திலே எமது கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் குமாரசாமி பேசுகிறார்.
கூடங்குளத்தில் மட்டுமல்ல ஜைதாபூர், கல்பாக்கம், கைகா உள்ளிட்ட இந்தியா முழுவதும் அணு உலைகள் கூடாது என எமது கட்சி இயக்கம் நடத்தி வருகிறது. தொடர்ந்து நடத்தும். இங்கு நடக்கும் போராட்டம் இந்தப் பகுதி மக்களுக்கான போராட்டம் மட்டுமல்ல. இந்தியா முழுவதுக்குமான போராட்டம். இந்தியாவுக்கான போராட்டம். அணு ஆபத்து இல்லாத இந்தியாவிற்கான போராட்டம். விடுதலைப் போராட்டத்தில் பல தியாகிகள் நமது நாட்டை விடுவிக்கப் போராடினர். பகத்சிங், வாஞ்சிநாதன், வ.உ.சி, திருப்பூர் குமரன், சுந்தரலிங்கம், பூலித்தேவன் இன்னும் பலர் சுதந்திர இந்தியாவிற்காகப் போராடினர். அணு ஆபத்து இல்லாத அழகான இந்தியாவிற்காகப் போராடுகிறோம். நமது போராட்டத்தில் நாம் வெற்றி பெறுவோம். நாம் மட்டுமே வெற்றிபெறுவோம்!
இது உங்கள் போராட்டம் என்றார்கள். இது நமது போராட்டம். நமக்கான போராட்டம். நமது இறையாண்மைக்கான போராட்டம். போராடுகிறவர்கள் சிறியவர்கள்; போராட்டத்தை வாழ்த்துகிறவர்கள் பெரியவர்கள் என்பது இல்லை. போராடுகிறவர்களே பெரியவர்கள். ஆகப் பெரியவர்கள். போராட்டத்தைக் கொச்சைப் படுத்துகிறவர்கள் சிறியவர்கள். மிக மிக மிகச் சிறியவர்கள். கீழ்த்தரமானவர்கள். தூசிலும் கீழானவர்கள்.
அணு உலை பாதுகாப்பானது; எந்தவிதமான அச்சத்துக்கும் அவசியமில்லை என்று முதலமைச்சர் வாக்குறுதி அளித்தார். என்ன நடந்ததோ தெரியவில்லை! சில நாட்களிலேயே சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்! மக்களின் தீவிரமான வீரஞ்செறிந்த போராட்டம் மாநில அரசாங்கத்தை பணியவைத்தது. உள்ளாட்சி தேர்தலின் போது உங்களுடன் ஒருத்தியாக இருப்பேன் என்றார். உள்ளாட்சி தேர்தல் முடிந்து 10 மாநகராட்சிகளையும் அதிமுக பிடித்துள்ளது. 125 நகராட்சிகளுள் 89 நகராட்சிகளைப் பிடித்துள்ளது. இன்னும் பேரூராட்சிகள், ஒன்றியங்கள், மாவட்டப் பஞ்சாயத்துகளையும் பெரும்பான்மையாகப் பிடித்துள்ளது. இந்த அனைத்து இடங்களிலும் கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூடவேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றச் சொல்லி உத்தரவு போடலாமே? நாங்கள் வெற்றிபெற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் முதல்தீர்மானமாக இத்தீர்மானத்தை நிறைவேற்ற இருக்கிறோம்.
மூன்று மாத காலமாக நடந்து கொண்டிருக்கும் போராட்டம் பல வகையிலும் சிறப்பான போராட்டமாகும். மீனவர், தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள் என அனைத்துப் பிரிவினரும் ஒன்று சேர்ந்து சிறப்பான ஒற்றுமையுடன் போராடிக் கொண்டிருக்கிறீர்கள். மத்திய, மாநில ஆட்சிகள் இறங்கி வந்ததற்கான காரணம் இந்த ஒற்றுமைதான். தேவாலயம், மசூதி, கோவில் என்ற பாகுபாடின்றி போராடி வருகிறீர்கள். பல துன்பங்களைத் தாங்கிக் கொண்டு போராடுகிறீர்கள். தியாகங்கள் செய்து போராடுகிறார்கள். மனம் தளராமல் போராடுகிறீர்கள். தொலைக் காட்சியில் பார்க்கிறோம், மாணவர்கள் சொல்கிறார்கள். பள்ளிக்கு போகாதது கஷ்டம்தான். ஆனால் எங்களால் எப்படியும் படித்து முன்னேறிவிட முடியும். நாங்கள் உயிரோடு இருக்க வேண்டுமே அதற்காகத்தான் போராடுகிறோம் என்கிறார்கள். இதுதான், இந்த உறுதிதான் ஆட்சியாளர்களை அஞ்சச்செய்கிறது.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கம் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ளும் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. இந்த இயக்கத்தை எத்தகைய அவதூறாலும் அடக்குமுறையாலும் தோற்கடிக்க முடியாது. அணுசக்தியை மக்கள்சக்தி தோற்கடிக்கும். மக்கள் வெல்வார்கள். மக்கள் மட்டுமே வெல்வார்கள். மக்கள் விரோதிகள் தோற்பார்கள். இன்குலாப் ஜிந்தாபாத்!
(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் அக்டோபர் 30 அன்று நடத்திய கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு நாள் அன்று இடிந்தகரையில் போராடி வரும் மக்கள் மத்தியில் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் பேசியது.)

Thursday, November 3, 2011

செய்தித் தாள்களில்

A news from 30th Oct. Indian Express - Madurai print

இன்று அணு உலை எதிர்ப்பு நாள் இந்திய கம்யூ., (எம்.எல்) முடிவு
தினமலர் : அக்டோபர் 30,  திருநெல்வேலி பதிப்பு
திருநெல்வேலி : கூடன்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி இந்திய கம்யூ., (எம்.எல்) சார்பில் இன்று (30ம் தேதி) அணு உலை எதிர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்று மாநில செயலாளர் பாலசுந்தரம் தெரிவித்தார்.
இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கூடன்குளம் அணு உலையை மூடக் கோரி கூடன்குளம், இடிந்தகரை பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் இந்திய கம்யூ.,(எம்.எல்) சார்பில் இன்று (30ம் தேதி) மாநில அளவில் கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு நாள் நடத்தப்படுகிறது. கோவையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் குமாரசாமி, அணு உலை எதிர்ப்பு போராட்ட கமிட்டி ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
நெல்லை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் முன் இன்று (30ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தொடர்ந்து 3 மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கூடன்குளத்திற்கு சென்று போராட்ட குழுவினரை சந்திக்கின்றனர். மேலும், சென்னை, சேலம், தஞ்சை உட்பட முக்கிய பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. 1988ம் ஆண்டு முதலே கூடன்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக தொடர்ந்து இந்திய கம்யூ., (எம்.எல்) போராடி வருகிறது. அணு உலையை மூடும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்.
மக்களின் உயிர் வாழ்வுரிமை, பாதுகாப்பு, எதிர்காலம் என்பதை விட மின்சாரம், தொழில் வளர்ச்சி, வெளிநாட்டு, உள்நாட்டு முதலீடு போன்வற்றிற்கு காங்., ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் அணு உலை தேவையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா இதுவரை கூறவில்லை. மக்கள் அச்சத்தை போக்கி கூடன்குளம் அணு மின் நிலையத்தை செயல்படுத்தலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறுகிறார். ஜெய்தாபூர் அணு உலையை எதிர்க்கும் இடதுசாரி கட்சியினர் கூடன்குளத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே, கூடன்குளத்திற்கு எதிராக அனைத்து தரப்பினரும் போராடி இந்த அணு உலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது நிர்வாகிகள் சங்கரபாண்டியன், ரமேஷ், தேன்மொழி, கருப்பசாமி, கணேசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

அணு உலை எதிர்ப்பு நாள்

திருநெல்வேலி, கன்யாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்கள் உள்ளிட்ட தென் தமிழக மக்களுக்கும் தமிழகத்திற்கும் பேராபத்து விளைவிக்கும் கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரி பகுதி மக்களின் பேராதரவுடன் 3வது கட்ட போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். போராட்டக் குழுவிற்கும் வீரஞ்செறிந்த வகையில் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) சார்பாக போராட்ட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கூடங்குளம் அணு உலை அமைக்கும் திட்டம் அறிவிக்கப் பட்ட 1988 முதல் அணு உலைத் திட்டத்தை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) போராடி வருவதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். தற்போதய போராட்டத்தின் போதும் எமது கட்சியின் சார்பில் இடிந்த கரை உண்ணாவிரதப் போராட்டத்தின்போதும் நேரில் பலமுறை வந்திருந்து எமது ஒருமைப் பாட்டை தெரிவித்து வருகிறோம். நெல்லையிலும் எமது கட்சியின் சார்பாக எதிர்ப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்.

வெளிநாட்டு, உள்நாட்டு பெருந்தொழில் குழுமங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மத்திய அரசு கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக ஆணவம்மிக்க வகையில் நடந்து கொள்கிறது. கார்ப்பரேட் கொள்ளையர்கள் நடத்தி வரும் நிலம், கனிம வளக்கொள்ளைகளுக்கு வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பேரால் ஊக்கமளித்து வரும் மத்திய அரசு, காரப்பரேட் கொள்ளைகளுக்கு எதிராக இந்தியா முழுவதும் போராடி வரும் மக்களின் போராட்டங்களை மூர்க்கத்தனமாக ஒடுக்கி வரும் அதே அணுகுமுறையைத் தான் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் தொடர்பாகவும் கடைப் பிடித்து வருகிறது. தமிழ்நாடு அரசாங்கமும் இந்த அழிவுகரமான பாதையிலிருந்து மாறுபட்டு நிற்பதாக தெரியவில்லை. இந்திய வளங்களைக் கொள்ளையடிக்க இந்திய மக்களை பேராபத்தில் தள்ள நடக்கும் மிக மோசமான கார்ப்பரேட் யுத்தத்திற்கெதிரான மக்கள் போராட்டமே கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம் என எமது கட்சி கருதுகிறது. எனவை இடிந்த கரையின் போராட்டம் இந்தியாவின் போராட்டம் என்று எமது கட்சி வாழ்த்துகிறது.

இடிந்தகரை-கூடங்குளம் மக்களின் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை வலுப் படுத்துகிற வகையில், கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி வரும் அக்டோபர் 30ம் தேதி எமது கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் அணு உலை எதிர்ப்பு நாள் நிகழ்ச்சிகள் நடத்துவதென எமது கட்சியின் மாநிலக் கமிட்டி முடிவு செய்துள்ளது. சென்னை, தஞ்சை,சேலம், கோவை, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பிற பகுதிகளிலும் எதிர்ப்பு நிகழ்ச்சிகள் நடத்த உள்ளோம். 30-10-2011 அன்று கோவையில் தொழிலாளர்களின் பெருந்திரள் எதிர்ப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளோம். அந்நிகழ்ச்சியில் எமது கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ். குமாரசாமி கலந்து கொள்கிறார். 30-10-2011 அன்று நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதோடு எமது கட்சி மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இடிந்தகரை-கூடங்குளம் பகுதிக்கு நேரில் வருகை தந்து ஆதரவு தெரிவிப்பதெனவும் முடிவு செய்துள்ளோம்.

(கட்சியின் மாநிலச் செயலர் தோழர் பாலசுந்தரம் அவர்களின் வாழ்த்து மற்றும் ஆதரவுக் கடிதத்திலிருந்து)